Friday, March 20, 2015

"கூண்டின் கதவுகள் திறந்தன
என்ற
கோலச் சிறகுகள் விரிந்தன
யாண்டும் நினைவுகள் பரந்தன
என
ஆசைக் கனவுகள் உயர்ந்தன"
எனப் பாடுங்குயிலாய்ப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் பூத்த மலர்தான் கவிஞர் முடியரசன். தமிழகத்தின் மூத்த தலைமுறைக் கவிஞர்களில் ஒருவர்.
இயற்பெயர்: துரைராசு
பிறந்த ஆண்டு1920 அக்டோபர் 7
சொந்த ஊர்: தேனி மாவட்டம் பெரிய குளம்
பெற்றோர்கள்
சுப்பராயலு, சீதாலட்சுமி அம்மையார். இவர்களுக்கு ஐந்தாவது மகனாவர். கவிஞருக்கு முன்பு பிறந்த குழந்தைகள் நால்வரும் நிலைக்கவில்லை. கவிஞர் மட்டுமே நிலைத்து நின்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்தவர்.
வளர்ப்பு
பெற்றோரிடம் வளர்ந்ததை விட அவரது தாய்மாமன் துரைசாமியிடமே துரைராசு வளர்ந்து வந்தார். துரைசாமி இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். எனினும் இலக்கண இலக்கியங்களைத் தாமே பயின்று பாடல் இயற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். கோம்பை, போடி, கம்பம் போன்ற ஊர்களிலிருந்து தம்மைத்தேடி வரும் கவிராயர்களிடம் இலக்கிய உரையாடல்கள் நிகழ்த்துவதையும், பாடல்கள் பாடுவதையும் இளமைப்பருவத்தில் கேட்ட துரைராசுக்கு கவிதை உணர்வு தோன்றி வளர்ந்தது.
கல்வி
முடியரசன் தனது ஐந்தாம் வயதில் பெரியகுளம் தெற்கு அக்கரகாரத்தில் உள்ள ஓடு மேய்ந்த பள்ளிக்கூடத்தில் தொடக்கக்கல்வி பயின்றார். சிறிது காலத்தில் அங்கிருந்து வாகம்புளி என்னும் இடத்தில் இருந்த கூரைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் பெற்றோர் பிழைப்புத் தேடி செட்டிநாட்டிற்கு குடிபெயர்ந்தனர். சிவகங்கை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள திண்ணைப்பள்ளியில் முதல் வகுப்பில் மீண்டு சேர்க்கப்பெற்றார். அங்கு வேங்கடராமையர் என்னும் ஆசிரியரிடம் எழுத்துப் பயிற்சி பெற்றார்.
ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபிரியில் உள்ள சன்மார்க்க சபையில் சேர்ந்து பயின்றார். ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களையும், நளவெண்பா, தேவாரம் முதலிய பக்தி இலக்கியங்களையும் ஆறுமுக நாவலரின் இலக்கண வினாவிடைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
ஆறாம் வகுப்பில் தமிழ்த்தேர்வில் அவர் முதல் மதிப்பெண் பெற்றார். அதற்காக ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகையுரையைப் பரிசாகப் பெற்றார்.
இதன் விளைவாக அவரின் தந்தை தமிழ் பண்டித பிரவேச வகுப்பில் சேர்த்தார். இதனால் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், இரா.இராகவையங்கார், விபுலானந்த அடிகள், தமிழ்வேள் உமாமகேஸ்வரனார் ஆகியோரின் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கவனிக்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.
அவரது உள்ளத்தில் மொழிப்பற்று, இனப்பற்று கிளர்ந்தெழ இக்கேள்விச்செல்வம் உறுதுணையாக விளங்கியது. பிரவேச பண்டித வகுப்புத்தேர்வில் முடியரசன் பாடலுக்கே முதலிடம் கிடைத்தது.
வித்துவான்:
அக்காலக்கட்டங்களில் தமிழ் ஆசிரியராக வரவேண்டுமென்றால் பிரவேச பண்டிதர் தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் வித்துவான் புதுமுகத்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முடியரசன் 1939 ஆம் ஆண்டு மேற்கண்ட தேர்வுகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் தொடங்கப்பெற்ற கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் முன்னிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார்.
ஆசிரியர்கள்
மீ. முத்துச்சாமிப்புலவர், மலிங்கசாமி, வை.சுப்பிரமணி ஐயர், வீர.செல்லப்பனார், பு.ரா.மீனாட்சி சுந்தரனார் முதலியோர் முடியரசனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் பெருமக்களாவர்.
இருப்பினும் தனக்கு தமிழறிவுறுத்தியவராக முடியரசன் திரு. மீ.முத்துசாமிப் புலவரையே குறிப்பிடுவார்.
வீரப்புலவர்
கல்லூரியில் "மாணவர் நன்னெறிக் கழகம்" என்னும் பெயரில் இயங்கிய மாணவர் மன்றத்தில் "புலவர் வீரம்" என்னும் தலைப்பில் முடியரசன் பேசினார். இதனைக் கேட்ட கல்லூரி முதல்வர், பு.ரா. மீனாட்சிசுந்தரனார் "வீரப்புலவர்" என்ற பட்டத்தினை வழங்கிப் பாராட்டினார்.
பெயர் மாற்றம்:
கல்லூரியில் பயின்று வந்த காலத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்த்தூரில் அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு துரைராசு என்ற தமது பெயரை (துரை அரசன், ராசுஅரசன், அரசனுக்கெல்லாம் அரசன்) முடியரசன் என மாற்றிக்கொண்டார். அப்புனைப்பெயரே இலக்கிய உலகில் நிலைத்து நின்றது.
அதே ஊரில் பாரதிதாசனின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். இது முடியரசின் ஆளுமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக முடியரசன் நாடு, மொழி, இனம் பற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது என்று தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கவிப்பணி
மேலைச்சிவபுரியில் மருத்துவர் ஒருவர் இல்லத்திற்கு வரும் குடியரசு, விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்களைப் படித்து பகுத்தறிவுக் கொள்கையின்பால் ஈர்க்கப் பெற்றார் முடியரசன். குறிப்பாக திராவிடநாடு இதழில் வெளிவரும் அண்ணாவின் எழுத்தோவியங்கள் அவரது உள்ளத்தை கொள்ளைக் கொண்டன.
இதன் விளைவாக தமது 21ம் வயதில் "சாதி என்பது நமக்கு ஏனோ?" என்னும் கவிதையை திராவிட நாடு இதழுக்கு பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் அனுப்பினார். இதுவே இவரின் முதல் கவிதை ஆகும்.
பணிகள்
1946 ஆம் ஆண்டு தஞ்சையில் வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு முன்பு குழிபிறை என்னும் ஊரில் சிறிதுகாலம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1947 ஆண் ஆண்டு ஜூன் மாதம் சென்னை முத்தியாலுப்பேட்டையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தவர் 1949 வரை அங்கேயே பணியாற்றினார். வகுப்பிற்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் எழுந்து வணக்கம் சொல்வதற்குப்பதில் "வெல்க தமிழ்" என்று முழக்கமிடுவர். அதன் பிறகே பாடங்கள் நடைபெறும்.
பொன்னியின் செல்வர்:
சென்னையில் ஆசிரியர்ப்பணி புரிந்த காலகட்டங்களில் பல்வேறு இலக்கிய இதழ்களின் தொடர்பும் கிடைத்தது. போர்வாள், அழகு, முருகு ஆகிய இதழ்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். குறிப்பாக பொன்னி என்ற இதழில் தொடர்ச்சியாக பாரதிதாசன் பரம்பரை என்னும் பகுதியில் இவரது கவிதைகள் வெளிவந்தன எனவே இவர் பொன்னியின் செல்வர் என அனைவராலும் அழைக்கப் பெற்றார்.
தொடர்பு கொண்டிருந்த கவிஞர்கள்கவிஞர் வாணிதாசன், திரு.வி.., பேராசிரியர் மயிலை சிவமுத்து ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
திருமணம்
பாரதிதாசனுடன் கொண்ட நட்பால் முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, அதை தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்திய முடியரசன் தமது 29 ஆம் வயதில் 1949 பிப்ரவரி 2-ம் தேதி கலைச்செல்வி என்னும் பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரி, குமணன், செல்வம் என்ற மூன்று மகன்களும், குமுதம், அன்னம், அல்லி என்ற மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு குழந்தைகளை ஈன்றெடுத்தனர்.
பல்கலைக்கழக பணி:
திருமணத்திற்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு காரைக்குடி மீனாட்சி சுந்தரனார் உயரிநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தவர் அங்கேயே 28 ஆண்டுகள் பணிபுரிந்து 1978-ல் ஓய்வு பெற்றார். 1985 -86-ல் மதுரைக்காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தவர், இராம, பெரிய கருப்பன் (தமிழண்ணல்) வேண்டுகோளுக்கிணங்க ஒப்பந்த அடிப்படையில் அங்கு பணியாற்றினார்.
திரைத்துறை
முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல்கள் அவருக்குப் பிடிக்காத காரணத்தால் திரும்பிவிட்டார். கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.
தமிழரின் மனம் தொட்ட பாடல்:
தமிழ் மொழி வளர தமிழை வாழ்த்தி இவர் பாடும் பாடல் நம்மை தமிழ்ப்பற்றுக்கு இலக்காக்கி ஈர்த்துச் சென்றுவிடும்.
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைனின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?
என்றவர்...
உண்மைக் கவிஞன் யார் என்பதைப் பின்வரும் பாடலில் உறுதி செய்கிறார்.
ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபடுவன் கவிஞன் ஆவன்
மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்
காவியங்கள்:
01. பூங்கொடி -1964
02. கவியரங்கில் முடியரசன் - 1964
03. வீரகாவியம் - 1966
04. ஊன்றுகோல் - 1983
கவிதைத் தொகுப்புகள்:
01. காவியப்பாவை - 1960
02. முடியரசன் கவிதைகள் - 1954
03. கவியரங்கில் முடியரசன் - 1960
04. பாடுங்குயில் -1986
கவியரசு முடியரசனார் தமிழுக்கு வழங்கிய நூல்கொடை:
01. 1960 -ல் கவியரங்கில் முடியரசன்
02. 1964 -ல் பூங்கொடி (1966 -ல் தமிழக அரசின் பரிசைப்பெற்று புகழடைந்தது).
03. 1968 -ல் அன்புள்ள பாண்டியனுக்கு
04. 1970 -ல் வீரகாவியம்
05. முடியரசன் கவிதைகள்
06. 1983 -ல் ஊன்றுகோல்
07. 1986 -ல் பாடுங்குயில்
08. 1985 -ல் நெஞ்சுபொறுக்கவில்லையே
09. 1986 -ல் மனிதனைத் தேடுகிறேன்
10. 199 -ல் தமிழ்முழக்கம்
11. 1999 -ல் நெஞ்சிற் பூத்தவை
12. 1999 -ல் ஞாயிறும் திங்களும்
13. 1999 -ல் வள்ளுவர் கோட்டம்
14. 1999 -ல் புதியதொருவிதி செய்வோம்
15. 2001 -ல் தாய்மொழி காப்போம்
16. 2005 -ல் மனிதரைக் கண்டுகொண்டேன்
17. எக்கோவின் காதல்
18. 2001 -ல் எப்படி வளரும் தமிழ்
19. 1960-ல் சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்(தொ.)
பட்டங்கள்:
முடியரசனார் வாழ்வில் பட்டங்களும் விருதுகளும் அவரைத் தேடிவந்தன.
·         1957 ஆம் ஆண்டு பேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு "திராவிட நாட்டின் வானம்பாடி" என்ற பட்டத்தை வழங்கினார்.
·         1966 ஆம் ஆண்டு திரு குன்றக்குடி அடிகளார் பறம்பு மலையில் நடந்த பாரிவிழாவில் இவருக்கு "கவியரசு" என்ற பட்டத்தை வழங்கினார்.
·         1974 ஆம் ஆண்டு திரு குன்றக்குடி அடிகளார் "சங்கப்புலவர்" என்ற பட்டத்தை வழங்கினார்.
·         1979 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி "கவிப்பெருங்கோ" என்னும் பட்டத்தை வழங்கினார்.
விருதுகள்:
·         1950 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டின் அழகின் சிரிப்பு என் ரகவிதை பாவேந்தர் பாரதிதாசனால் முதற் பரிசிற்கு தேர்ந்தெடுக்கப்பெற்றது.
·         1983 ஆம் ஆண்டு சேலத்தில் தமிழகப் புலவர்குழு "தமிழ்ச்சான்றோர் விருது" வழங்கி சிறப்பித்தது.
·         1989 ஆம் ஆண்டு தமிழக அரசு 1987 ஆம் ஆண்டிற்கான பாவேந்தர் விருதினை வழங்கியது.
·         1993 ஆம் ஆண்டு அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு
·         1998 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது, நல்லாசிரியர் விருது மற்றும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி சிறப்பித்தது.
நாட்டுடைமை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவருடைய படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதோடு 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு கவிஞரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது. இவரின் படைப்புகள் சாகித்திய அகாதெமியினால் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மறைவு
பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாயக் கவிவானில் பாடிப் பறந்த முடியரசன் என்ற குயில் அகவை 79-ல், 1998 டிசம்பர் 4 ஆம் தேதி நம்மிடமிருந்து மறைந்தது. தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறிய கவிஞர், அதன்படியே நிறைவேற செய்தவர்.

1 comments:

  1. Casino Review (2021) - DrMCD
    Casino is licensed 영주 출장마사지 and regulated 안성 출장안마 by the Malta Gaming Authority under 속초 출장샵 the laws of Curacao, and the Casino 경주 출장안마 Review by 인천광역 출장마사지 experts. It's also licensed

    ReplyDelete