Tuesday, December 9, 2014

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
·         அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
·         கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
·         முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
·         என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
·         தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
·         உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!
குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.
அலகு-1 (பொது அறிவியல்)
§  இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.
§  வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.
§  தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.
§  விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.
அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)
§  வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.
§  அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.
§  புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.
§  பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.
§  அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.
அலகு 3 (புவியியல்)
§  பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.
அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)
§  சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.
அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)
§  அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அலகு 6 (இந்திய பொருளாதாரம்)
§  இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)
§  இந்திய தேசியத் தலைவர்களான காந்தி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.
அலகு 8 (திறனறிதல் மற்றும் அறிவுக்கூர்மை)
§  கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு.

1 comments: