Tuesday, October 16, 2012

மனத்தாலும் அறிவாலும் அறியப்படும் ஒரு பொருளை, அழகுற உணர்த்தும் படைப்பாக்கம் அல்லது கலைத் திறன் என்பது இலக்கியம் எனப்படுகிறது. இது நோக்கம், தேவை முதலியவற்றின் சாதனமாக உள்ளது. இத்தகைய இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல செல்நெறிகளையும் பல கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு உருவாகிறது.
    இத்திறனாய்வு பல அணுகுமுறைகளையும், வகைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றைக்     கண்டறிவது, திறனாய்வின் ஆழமான பண்புகளையும் பரந்துபட்ட பாதைகளையும் அறிவதற்குத் துணை செய்யும். ஏனெனில் திறனாய்வு என்பது ஒற்றைத்தன்மை அல்லது ஒற்றைப் போக்குக் கொண்டதன்று; பன்முகமான பண்புகளும் வழி முறைகளும் கொண்டது. எனவே முதலில் திறனாய்வின் வகைகளை இங்கே அறிவது மிகவும்அவசியமாகிறது.

திறனாய்வு வகைகள்
திறனாய்வின்     வகைகள்     என்பவை,     திறனாய்வு செய்யப்படுவதற்குரிய வழிமுறைகள் இன்னின்ன என்பதன் அடிப்படையில்     அமைகின்றன.     உதாரணமாகப்     பல இலக்கியங்களிலிருந்து அவற்றின் சில பண்புகளைச் சாராம்சமான பண்புகளாகப் பிழிந்தெடுத்து அடையாளங் காட்டுவது ஒருவகை. குறிப்பிட்ட ஒரு கொள்கை, அல்லது ஒரு பண்பு நிலையை அளவுகோலாகக் கொண்டு அதனைப் பல இலக்கியங்களோடு பொருத்திப் பார்த்தல் என்பது இன்னொருவகை. அதாவது திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை (Method) அல்லது செய்முறையைப் பேசுவது, திறனாய்வின் வகை என்று அறியப்படுகிறது.

திறனாய்வின் வகைகள் பல. எனினும் அவற்றுள் மிக அடிப்படையானவை அல்லது முக்கியமானவை     என்பவை பின்வருமாறு:
(1) பாராட்டுமுறைத் திறனாய்வு
(2) முடிபுமுறைத் திறனாய்வு
(3) விதிமுறைத் திறனாய்வு
(4) செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு
(5) விளக்கமுறைத் திறனாய்வு
(6) மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
(7) ஒப்பீட்டுத் திறனாய்வு
(8) பகுப்புமுறைத் திறனாய்வு

பாராட்டுமுறைத் திறனாய்வு
“எதனைப் போற்றுகின்றோமோ அது வளரும்” என்று பாரதியார் சொல்வார். மேலும், பாராட்டுதல் என்பது ஒரு நல்ல மனிதப் பண்பு. பேசப்படும் பொருளைப் போற்றியுரைப்பது என்பது சொல்லுகின்ற வழிமுறையின் ஒரு பண்பு ஆகும். எடுத்துக் கொண்ட பொருளையும், இலக்கியத்தையும் குறை காணாமல், அந்தக் குறைகளைக் கண்டாலும் அவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் நிறைகளை மட்டுமே விதந்து பேசுவது பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) ஆகும்.

(1) பாராட்டுமுறைத் திறனாய்வு, அடிப்படையில் விளக்க முறையாக அமையக் கூடும். ஆனால் பாராட்டுதல் என்பது விளக்கமுறையின் நோக்கமல்ல

(2) விளக்கிச் செல்லும் போது அதனைப் போற்றுகிற விதத்தில் பண்புகளையே கூறிச் செல்வதால் அத்தகையதைப் பாராட்டுமுறைத் திறனாய்வு என்கிறோம்.

(3) இன்று, இலக்கியச் சொற்பொழிவாளர்கள், கல்வியாளர்கள் முதலியவர் களிடம், பாராட்டு முறை பரவலாகக் காணப்படுவதைக் காணலாம் .சில வகையான மேடையுத்திகள் , சில விருப்பங்கள் காரணமாக இந்தப் பாராட்டுமுறை நிறையவே இடம் பெறுகிறது.

(4) இரசனை முறையில் ஈடுபாட்டுடன் பாராட்டுகின்ற ஆய்வுகள் தமிழில் நிறையவே உண்டு. உதாரணம் கம்பனைப் புகழ ஓர் குழுவினரே உண்டு. அவர்கள் பல தரப்பினர். ஜெகவீரபாண்டியன், டி.கே.சிதம்பரநாத முதலியார், ஏ.சி. பால்    நாடார், கம்பனடிப்பொடி சா.கணேசன்,    ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், தெ.ஞானசுந்தரம் இப்படிப்     பலர் உள்ளனர்.

பாராட்டுமுறையின் எல்லை
திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் விளக்கங்களையும், தனித்தன்மைகளையும் வாசகர் மனதில் பதியும்படி கொண்டு செல்ல வேண்டும். இவற்றைத் தவிரக் குறை அல்லது நிறை என்ற ஒன்றனையே கண்டு அதனையே விதந்து    உரைப்பதை நோக்கமாகக கொள்ளக்கூடாது. அது அவ்விலக்கியத்தின்    பலவிதமான    அல்லது    வேறுபட்ட பண்புகளை ஒதுக்கி விடுவது ஆகும். பாரபட்சம் அல்லது பக்கச் சார்புக்குத் திறனாய்வு இடம் தரலாகாது. 

மேலும், எதுவும் அளவோடு சொல்லப்பட வேண்டும். திறனாய்வில் வெற்று உரைகள் முக்கியமல்ல என்பதை அறிய வேண்டும். பாராட்டுக்களால் அலங்கரிப்பதும், குறைகளைப் பெரிதுபடுத்துவதும் இரண்டுமே உண்மையை உதாசீனப்படுத்தி விடும். ஆகையால் திறனாய்வுக்கு உண்மை என்பது முக்கியம். 

முடிபுமுறைத் திறனாய்வு 
முடிபுமுறைத் திறனாய்வு (Judicial criticism)    என்பது அடிப்படையான சில வரையறைகளையும்     விதிகளையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவது ஆகும்.  

உதாரணமாகத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்ற காப்பிய இலக்கணம் கொண்டோ, சாட்விக் (Chadwick), கெர் (W.P.Ker), பவுரா (C.M.Bowra) போன்ற மேனாட்டார் கூறும் கோட்பாடுகள் கொண்டோ ஒரு காப்பியத்தின் அமைப்பையும் பண்பையும் கணிப்பது, முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டதாகக் காப்பியம் அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் சொல்கிறது. இவ்வாறே மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் கூறுகின்றனர். ஆனால் சிலப்பதிகாரத்தில் அத்தகைய தலைவன் (கோவலன்) இல்லை என்பதற்காக அதனைக் காப்பியம் அன்று என்று கூறி விட முடியுமா?

தன்னுடைய இயல்பான போக்கில் ஏற்புடைய பல உள்கட்டமைப்புகள் பெற்றுள்ள சிலப்பதிகாரம், உலகக் காப்பியங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தது அல்லவா?

மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய     செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அது சரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

முடிபுமுறைத் திறனாய்வின் பண்புகள்
ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது இதன் பண்பு ஆகும். இதனடிப்படையில் ஒன்றன் சிறப்பு அல்லது தரம் உயர்ந்தது என்று முடிவு கூறுவதற்கு இந்த வகையான திறனாய்வு முயலுகிறது. இது, ஏற்கெனவே எழுதப்பட்ட விதிகளுக்கும் அவற்றின் விளக்கங்களுக்கும் ஏற்ப நீதிபதி தீர்ப்பு வழங்குவதைப் போன்றது ஆகும். எனவே இங்குக் கவனம் மிகவும் அவசியம் ஆகும். இத்திறனாய்வில் முடிபுகள் என்பது சமன்நிலையில் சீர்தூக்கும் கோல்போல் இருக்க வேண்டும். 

கல்வியியல் பட்டம் சார்ந்த ஆய்வேடுகள் பல, முடிபு முறைகளைச் சார்ந்தே அமைந்துள்ளன. தமிழில் உள்ள முன் மாதிரிகளையோ வரையறைகளையோ இவை பின்பற்றாவிட்டாலும் அல்லது அவற்றைப் பற்றி இவை அறிந்திராவிட்டாலும், மேலைநாட்டார்     கொள்கைகளையும் மேற்கோள்களையும் வரையறைகளாகக் கொண்டு இந்த ஆய்வேடுகள் தமிழ் இலக்கியங்களுக்கு முடிபு சொல்ல முயலுகின்றன; அவற்றை மதிப்பிட முயலுகின்றன.     ஆனால் இங்கே விதிகள் அவ்விலக்கியங்களிலிருந்து எடுக்கப்படாமல், வெளியே புறத்தே இருந்து எடுக்கப்படுகின்றன. ஆகையால் இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

முடிபுமுறைத் திறனாய்வின் எல்லை
ஆயினும் சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதற்கு இது ஓரளவு உதவக் கூடியதேயாகும்.சில பொதுமைகளின் பின்னணியில் குறிப்பிட்ட ஒன்றைக் காண்பதற்கு இது உதவக் கூடியதாகும். புதிய வடிவங்களை, சோதனை முயற்சிகளை இது புறக்கணித்து விடுகிறது. இன்றைய தமிழிலும் இது இருக்கிறது. பழந்தமிழிலும் இது இருந்தது

திறனாய்வு என்பது இலக்கியங்கள் புதிய பாதைகளில் பயணிக்க வழி மறுப்பது அல்ல; வழி வகுப்பது, வழி தருவது ஆகும்.





1 comments: