Sunday, April 8, 2012

( உருபெழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் கூறுவது )

உயிரீறுகள்

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை

- புலியூர் கேசிகன் உரை
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப்பகுதியவாய ஆறனையும் ஈற்றிற்கொண்ட நிலைமொழியின் முன்னர் வருகின்ற வேற்றுமையுருபுகட்கு இடையில் வருஞ்சாரியை இன் சாரியையாகும்.

எ.கா : வினவினை, வினவினோடு, வினவிற்கு, விளவினது, விளவின்கண், எனவும் பலாவினை, பலாவினொடு, பலாவிற்கு, பலாவினது, பலாவின்கண், எனவும் கடுவினை, கடுவினோடு, கடுவிற்கு, கடுவின்கண், எனவும் தழூஉவினோடு, தழூஉவிற்கு, தழூஉவினை, தழூஉவினது, தழூஉவின்கண், எனவம் சேவினை, சேவினொடு, சேவிற்கு, சேவினது, சேவின்கண், எனவும் வௌவினை, வௌவினொடு, வௌவிற்கு, வௌவினது, வௌவின்கண், எனவும் வரும்

அகர ஈற்றுப் பன்மைப் பெயர்கட்கு வற்றுச் சாரியை

பல்லவை நுதலிய அகர இறு பெயர்
வற்றொடு சிவணல்எச்சம் இன்றே

பன்மைப் பொருளைக் குறிக்கும் பெயர்களின் இறுதி நின்ற அகரம் வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதலில்லை. 

எகா :  பல்லவற்றை, பல்லவற்றோடு, உள்ளவற்றை, உள்ளவற்றாடு, இல்லவற்றை, இல்லவற்றோடு, சில்லவற்றை, சில்லவற்றோடு என வரும் 

யா என்னும் வினாவுக்கும் வற்றுச் சாரியை

யாவென் வினாவும் ஆயியல் திரியாது

யா என்ற ஆகாரவீற்று வினாப்பெயரும் வற்றுச் சாரியை பெறுதலில் நின்றும் மாறுபடாது.

எ கா :  யாவற்றை, யாவற்றோடு என வரும்

உகர வீற்றுச் சுட்டுக்கு அன் சாரியை

சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித்து உகரம் கெடுமே.

சுட்டை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல் அன் சாரியையோடு பொருந்தித் தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரம் கெடும்.

எ.கா : அதனை, அதனொடு, இதனை, இதனொடு, உதனை, உதனொடு என வரும்

ஐகார ஈற்றிற்கு வற்றுச் சாரியை

சுட்டு முதல் ஆகிய ஐ யென் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

சுட்டை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொல், வேற்றுமையுருபின் முன்னர் வற்றுச்சாரியைப் பெற்று நிற்றலும் சில உருவின்கண் வற்றோடு இன்சாரியை பெற்று நிற்றலும் உரித்தாம்.

எ.கா : அவையற்றை, அவையற்றோடு, இவையற்றை, இவையற்றோடு, உவையற்றை, உவையற்றோடு எனவும் அவையற்றிற்கு, அவையற்றின்கண் எனவும் வரும்

யா வென் வினாவின் ஐ க்கும் வற்றுச் சாரியை

யாவென் வினாவின் ஐயென் இறுதியும்
ஆயியல் திரியாது என் மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐ யொடும் கெடுமே.

யாவென்னும் வினாவினையுடைய ஐகார ஈற்றுச் சொல்லும் அத்தன்மையினின்றும் மாறுபடாது என்று கூறுவர் புலவர். அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தோடுகூடக் கெடும்.

எ கா : யாவற்றை, யாவற்றோடு என ஒட்டுக

 நீ என்னும் ஈகார ஈற்றுப் பெயர்க்கு னகர வொற்று

நீஎன் ஒரு பெயர் நெடுமுதல் குறுகும்
ஆ வயின் னகரம் ஒற்றாகும்மே.

நீ என்னும் ஒரு பெயர் தன்மேல் நின்ற நெடிதாகிய ஈகாரமும் முதல் வேற்றுமை யுருபின் முன்னர்க் குறுகி இகரம் ஆகும். அவ்விடத்தில் வரும் னகரம் ஒற்றாய் நிற்கும்.

எ கா : நின்னை, நின்னொடு எனச் செய்கையறிந்து ஒட்டுக

ஓகார ஈற்றுக்கு ஒன் சாரியை

ஓ கார இறுதிக்கு ஒன்னே சாரியை

ஓ காரத்தை இறுதியாகக் கொண்ட சொற்கு இடையில் வருஞ் சாரியை ஒன் சாரியையே ஆகும்.

எ கா : கோஓனை கோஓனொடு என ஒட்டுக. சிறுபான்மை இன் சாரியை பெறுதலும் உண்டு கோவினை கோவினொடு என வரும்

அகர ஆகார வீற்றிற்கு அத்துச் சாரியை

அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடு சிவணும் ஏழன் உருபே.

அகர ஆகார வீற்று மரப்பெயரின் கண் ஏழாம் வேற்றுமையுருபு இன்னொடன்றி அத்துச்சாரியையோடும் பொருந்தும்

எ கா : விளவத்துக்கண் பலாவத்துக்கண் என வரும்

மெய்யீறுகள்

ஞ ந மெய்யீற்றுக்கு இன் சாரியை

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை

ஞ ந என்னும் புள்ளியீறுகட்கு வரும் சாரியை இன் சாரியையையே ஆகும்.

எகா : உரிஞினை, உரிஞினொடு, பொருநினை, பொருநினொடு என ஒட்டுக

ஏனை வகார ஈற்றுக்கு இன் சாரியை

ஏனை வகரம் இன்னொடும் சிவணும்

ஒழிந்த உரிச்சொல் வகரம் இன் சாரியையோடு பொருந்தி முடியும்.

எகா : தெவ்வினை, தெவ்வினோடு என ஒட்டுக

மகர ஈற்றுக்கு அத்துச் சாரியை

மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை

மகரமாகிய புள்ளியீற்றுச் சொல்லின் முன்னர் அத்துச் சாரியையே வரும்

எகா : மரத்தை, மரத்தொடு, நுகத்தை, நுகத்தொடு என வரும்

சில மகரவீறு இன் சாரியை பெறுதல்

இன் இடைவரூஉம் மொழியு மாருளவே

மகர வீற்றுச் சொற்களுள் அத்தே யன்றி இன் சாரியை இடையில் வந்து முடியும் சொற்களும் உள.

எகா : உருமினை, உருமினொடு, திருமினை, திருமினொடு என வரும்

நும் என்னும் மகரவீற்றுப் பெயர் சாரியை பெறாமை

நும் மென் இறுதி இயற்கை யாகும்


நும் என்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும்.

எகா : நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரு

தாம் நாம் யாம் என்னும் மகர ஈறுகளும் அன்ன

தாம் நாம் என்னும் மகரத்து இறுதியும்
யாம் என் இறுதியும் அதனோர் அன்ன
ஆ எவ்வாகும் யாம் என் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்

தாம் நாம் என்னும் மகரவீற்றுச் சொற்களும் யாம் என்னும் மகரவீற்றுச் சொல்லும். நும்மிற்குக் கூறியது போலவே சாரியை பெறாது முடிதலையுடைய; யாம் என்னும் மகரவீறுதிச் சொல்லின் கண் உள்ள ஆகாரம் எகரமாகும் ; அவ்விடத்து நின்ற யகர வொற்றுக் கெடும் ஏனைத் தாம் நாம் என்னும் இரண்டன் கண் உள்ள முதல் குறுகித் தம் நம் என நிற்கும்.

எகா : தம்மை, தம்மொடு, நும்மை, நும்மொடு, எம்மை, எம்மொடு என வரும்

எல்லாம் என்னும் மகர ஈற்றிற்கு வற்றும் உம்மும்

எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதி யான

எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல்முன் வேற்றுமை யுருபுவரின் இடையில் வற்றுச் சாரியை முழுதும் தோன்றும். இறுதிக்கண் உம்மை நிலைப்பெறும்.

எகா : எல்லாவற்றையும், எல்லாவற்றினும், எல்லாவற்றுக்கண்ணும், என வரும்

உயர்திணையில் அது நம் சாரியை பெறுதல்

உயர்திணை ஆயின் நம் மிடைவருமே.

எல்லாம் என்னும் சொல் உயர்திணையாய் நிற்குமிடத்து நம்மென்னும் சாரியை இடைநின்று புணரும்.

எகா : எல்லா நம்மையும், எல்லா நம்மொடும், எல்லா நம்மினும், எல்லா நங்கணும் என வரும்

மகர ஈற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்
ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதி யான
தம்மிசை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.

எல்லாரும் என்னும் படர்க்கையுணர்த்தும் மகரவீற்று உயர் திணைச் சொல்லும் எல்லீரும் என்னும் முன்னிலை யுணர்த்தும் மகரவீற்று உயர்திணைச் சொல்லும் மகர வொற்றும் அதன் முன்னின்ற உகரமும் கெட்டு முடியும் என்பர். ஈற்றில் அவ்வுகரம் ஏறிநின்ற நகர ஒற்று கெடாது நிற்றலை விரும்பும் ஆசிரியன் அவ்விரு மொழியின் இறுதிக் கண்ணும் உம்மெனுஞ் சாரியை நிலைபெறும். படர்க்கைச் சொல்லிற்குத் தம்முச் சாரியை இடைவரும். முன்னிலைச் சொல்லிற்கு நும்முச் சாரியை இடைவரும்

எகா : எல்லார் தம்மையும், எல்லார் தம்மினும் என உகரம பெற்றும். எல்லாம் தமக்கும், எல்லார் தமதும் என உகரம் கெட்டும் வரும். எல்லார் தம்மொடும், எல்லீர் நும்மையும், எல்லீர் நும்மொடும் எனவும் வரும்.

னகர வீற்றுச் சிலவற்றிற்கு முடிபு

தான் யான் என்னும் ஆயிர் இறுதியும்
மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே.

தான் யான் என்னும் அவ்விரண்டு னகரவீற்றுச் சொற்களும் மேற்கூறப்பட்ட தாம் நாம் யாம் என்னும் முப்பெயரோடு வேறுபாட்டினை உடையவல்ல. தான் என்பது தன் எனக்குறுகியும் யான் என்பதன் கண் ஆகாரம் எகாரமாய் யகரவொற்றுக் கெட்டும் முடியும்.

எகா : தன்னை, தன்னொடு, என்னை, என்னொடு என வரும்

சில னகர ஈறுக் அத்தும் இன்னும் பெறுதல்

அழனே புழனே ஆயி மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணரு மோரே.

அழன் புழன் என்னும் இரண்டு சொற்களும் அத்து இன் என்னுஞ் சாரியைகள் மாறிவத் தோன்றுதல் பொருந்துமென்று உணர்தந்தோர் கூறுவர்.

எகா :  அழத்தை, அழனிலை, புழத்தை, புழனிலை என வரும்

முற்றுகரக் குற்றுகர ஈறுகள்

ஏழு என்னும் பெயர்க்கு அன் சாரியை

அன் என் சாரியை ஏழன் இறுதி
முன்னர் தோன்றும் இயற்கைத் துஎன்ப

ஏழென்னுஞ் சொல்லின் இறுதியின் முன்னர் வேற்றுமையுருபுவரின் இடையில் அன் சாரியை தோன்றும் இயற்கையுடையது என்று ஆசிரியர் கூறுவர்.

எகா : ஏழனை ஏழற்கு ஏழனினி ஏழனொடு என வரும்

குற்றுகர ஈற்றிற்கு இன் சாரியை

குற்றியலுகரத்து இறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன் என் சாரியை

குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட சொற்களின் முன்னர் வேற்றமை உருபு வரின் இன் சாரியை தோன்றும்

எகா : வரகினை, வரகினொடு, நாகினை, நாகினொடு என வரும்

சில குற்றுகர ஈறுகள் இரட்டி முடிதல்

நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத்தோன்றும்
அப்பால் மொழிகள் அல்வழி யான

நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு ஒற்று மிகத் தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாத இடத்து இனவொற்று மிக்குத் தோன்றும்

எகா : யாட்டை, யாட்டொடு, யாட்டுக்கு, யாட்டின், யாட்டது, யாட்டுக்கண் என வரும்

இரட்டி முடிவன சாரியை பெறாமை

அவைதாம்
இயற்கைய வாகும் செயற்கைய என்ப

அங்ஙனம் இனவொற்று மிகுஞ் சொற்கள் சாரியை பெறாது இயல்பாய் நிற்குந் தன்மையன என்பர்.

எகா :  யாட்டை யாட்டொடு என வரும்

குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்க்கு முடிபு

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்

எண்ணும் பெயர்களினது குற்றுகரவீறு அன் சாரியையோடு பொருந்தும்

எகா : ஒன்றனை, ஒன்றனொடு, இரண்டனை, இரண்டனொடு என வரும்

ஒருஃபது முதலிய குற்றுகர ஈறுகள் ஆன் சாரியையும் பெறுதல்

ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் காலை
ஆனிடை வரினும் மானம் இல்லை
அஃது என் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே

பத்தால் தொடர்ந்து வரப்படும் ஒன்று முதலான எல்லா எண்களையும் வேற்றுமையுருபின் முன்னர்ச் சொல்லுங் காலத்தில் ஆன் சாரியை இடையில் வரினுங் குற்றமில்லை. அப்போது அஃது என்னுஞ் சொல் கெடும்;  பகர வொற்று நிற்கும் .

எகா : ஒரு பானை, ஒரு பானோடு, ஒருபஃதினை, ஒருபஃதினொடு, இருபஃதினை, இருபஃதினொடு என வரும்

யாது அஃது என்னும் குற்றுகர ஈறுகட்கு அன் சாரியை

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தம் கெடுதல் ஆவயின் ஆன

யாது என்னும் குற்றியலுகர விறுதியும் சுட்டை முதலிலும ஆய்தத்தை இடையிலுங் கொண்ட ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர விறுதியும் அன் சாரியையொடு பொருந்தும். அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும்.

எகா : யாதனை, யாதனொடு, அவனை, அவனொடு, இதனை, இதனொடு, உதனை, உதனொடு என வரும்

புறனடை

குற்றுகர ஈற்றுத் திசைபெயர் ஏழனுருபிற் சாரியை பெறாமலும் வருதல்

எழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே

திசைப் பெயர்களின் முன்னர் ஏழாம் வேற்றுமையுருபுவரின் முன்கூறிய இன்சாரியை நின்று முடிதலே அல்லாமல் நில்லாது இயல்பாகவும் முடியும். அவ்விடத்துக் குற்றியலுகரத்திறுதி அதன் பற்றுக்கொட்டுடன் கெடும்.

எகா :  வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மெற்கின்கண் எனவும் : வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் : வரும். இன் பெறுவழி வகரம் கெடாதென்று உணர்க. ஆவயின் என்றதனால் கீழ்சார், கீழ்புடை என விகாரப் படுதலும் கீழைச்சேரி, மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலுங் கொள்க.

புள்ளி இறுதியும் உயிரிறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
தேருங்காலை உருபொடு சிவணிச்
சாரியை நிலையும் கடப்பாடு இலவே.

புள்ளியீற்றுச் சொற்களுள்ளும் உயிரீற்றுச் சொற்களுள்ளும் சொல்லப் பெற்வற்றை நீக்கிய எஞ்சிய சொற்களெல்லாம் ஆராயுமிடத்து போது சாரியையோடு நிலை பெற வேண்டும் என்னும் கட்டாயமில்லை. நின்னும் நில்லாதும் முடியும்.

எகா : மண்ணினை, மண்ணை, வேயினை, வேயை, நாயினை, நாயை, கல்லினை, கல்லை, முள்ளினை, முள்ளை, கிளியினை, கிளியை, பொன்னினை, பொன்னை, தாழினை, தாழை, தீயினை, தீயை, கழையினை, கழையை என வரும்.

உருபியல் உரை முற்றும்
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment